Saturday 28 July 2012

வட்டியில்லாத் திட்டத்தை நோக்கி...


வட்டியின் கோரப்பிடியிலும் பொருளாதாரச் சுரண்டலிலும் சிக்கித் தவித்த அரபு மக்களுக்கு 1400 வருடங்களுக்கு முன்னரே வட்டியிலிருந்து விடுதலை வழங்கியது இஸ்லாம். வட்டியை என்னுடைய காலடியில் மிதிக்கிறேன்! கொடுத்த தொகைக்கு அதிகமாக எதையும் இனிமேல் பெறக் கூடாது!என்ற நபி (ஸல்) அவர்களின் வீர முழக்கம் அன்றைய ஏழைகளுக்கு மறுவாழ்வு தந்தது.


வட்டியின் இறுதி முடிவு கஷ்டத்தில்தான் முடியும்! வட்டிப் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் அபிவிருத்தி இருக்காது! வட்டி வாங்குபவனும் கொடுப்பவனும் கணக்கெழுதுபவனும் அதற்காகச் சாட்சி சொல்பவர்களும் அல்லாஹ்வின் சாபத்திற்குரியோர்! அந்த சாபத்தில் அனைவரும் சமமானவர்கள் என்றெல்லாம் மார்க்கம் எச்சரிக்கிறது. வட்டி வாங்குவது அல்லாஹ்வுக்கு எதிராகத் தொடுக்கும் போர் என்று கூட அல்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது. வட்டியை நோக்கிச் செல்பவன் தன்னை அழித் தொழிக்கும் பாதாளப் படுகுழியை நோக்கி அடியெடுத்து வைக்கின்றான். அவனை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் அல்லாஹ்வும் அவன் தூதரும் எச்சரிக்கின் றார்களே தவிர, இவன் வட்டி வாங்குவதாலோ கொடுப்பதாலோ அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.


வாழ்வின் எதார்த்தத்தை மறந்து வாழும் மனிதன் ஆடம்பர வாழ்க்கையை ஏறெடுத்துப் பார்க்கிறான். போலிக் கவர்ச்சிகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள, தன் தகுதிக்கு மீறிய முடிவெடுத்துக் கொண்டு கல்லாவைப் பார்க்கிறான்; காலியாக உள்ளது. வீடு தேடிவந்து வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் நினைவுக்கு வரவே, சில மணித் துளிகளில் பைனான்ஸ் கம்பெனி, பேங்க், அடமானக் கடை, கந்து வட்டி ஆகியோரின் வாசலில் தன்னை அடமானம் வைக்கிறான். அவன் அடமானம் வைப்பது, அவன் மானத்தையும்தான்!


உலகப் பொருளாதார நிர்ணயப் புருஷனாக பீற்றிக் கொண்ட அமெரிக்கா, வட்டி வங்கிகளின் சரிவால் பிற நாடுகளிடம் பிச்சை எடுத்ததையும், வட்டி வங்கிகளின் ஒத்துழைப்புடன் போலி ஆடம்பரங்களையும் அனாச்சாரங்களையும் அரங்கேற்றி வந்த ஒரு வளைகுடா நாடு பிறரிடம் யாசகம் கேட்டு நின்றதையும் கண்ட பிறகும் கூட, வட்டி மோகம் குறைய வேண்டாமா?


தம் ஆரம்பர வாழ்க்கைக்காகக் கணவர்களுக்குத் தெரியாமல் வட்டி வாங்கியதால் பிறரிடம் தங்கள் சொத்தை மட்டுமல்ல, தங்கள் கற்பையும் இழந்த பெண்கள் எத்தனை பேர்! ஏன் இந்த அவல நிலை? ஊர் நிசப்தாக இருக்கும் மதிய வேளையில் பெண்கள் தனித்திருக்கும் வீட்டுக்குள் வட்டி வசூல் என்ற பெயரில் வட்டிக் கயவர்கள் நுழைவதற்குக் காரணமாக இருப்பது எது? முஸ்லிம் சமூகக் கட்டமைப்பையும் கண்ணியத்தையும் காப்பாற்றுவதில் பொருளாதாரத்திற்கு மகத்தான பங்குண்டு! இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக ‘ஜகாத்’ இடம் பெற்றிருப்பதும் இதனால்தான்!


நன்றி: ‘சமுதாய ஒற்றுமை’ அக்டோபர் 2010 இதழ்

No comments:

Post a Comment