Wednesday 14 November 2012

இஸ்லாமிய வங்கி இந்தியாவில் சாத்தியமா?

'சாத்தியமே' என்று சான்று பகர்கின்றது 'ரிசர்வ் பேங்க் ஆஃ இந்தியா'...!
                                   
வட்டியில்லாத இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவிலும் நடைமுறைப் படுத்துவது தொடர்பாக, இந்திய அரசுக்குத் தான் பரிந்துரை செய்துள்ளதாக RBI கவர்னர் திரு. சுப்பா ராவ் அறிவித்துள்ளார்.
                                   
Banking Regulation Act என்ற சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்;  அதன் மூலம், வட்டியில்லாத இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளதாக, கடந்த அக்டோபர் 4 அன்று பாண்டிச்சேரியில் நடந்த மாநாட்டில் அறிவித்தார்.

மேற்காணும் சட்டம் (BRA) வட்டியில்லாத வங்கி முறையை அனுமதிக்காததால், இதுவரை இந்தியாவில் இஸ்லாமிய வங்கி இயல் நடைமுறைப் படுத்தப்படவில்லை.  ஆனால், உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையில் இருந்து, நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.

இஸ்லாமிய வங்கி முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதனை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று RBI கவர்னர் உணரத் தலைப்பட்டிருப்பது பற்றி, Institute of Objective Studies (IOS) அமைப்பின் தலைவர் டாக்டர் முஹம்மத் மன்ஸூர் ஆலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
                                        
"உலகில் பொருளாதாரச் சீரழிவும் குழப்பமும் நிலவும் இன்றையச் சூழலில், உலகம் இஸ்லாமிய வங்கி முறையின் மீது கவனம் செலுத்தி, மக்களைப் பயனடையச் செய்யும் முயற்சி ஒரு பாராட்டத் தக்க முன்னேற்றம் ஆகும்" என்கிறார் டாக்டர் மன்ஸூர் ஆலம்.

இத்தகைய சாதகமான சூழலுக்குக் காரணம், Institute of Objective Studies உள்படப் பல இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் அயராத உழைப்புதான் என்றும் டாக்டர் மன்ஸூர் ஆலம் கருத்தறிவித்துள்ளார்.  மேற்குறிப்பிட்ட சட்டத் திருத்தத்தை RBI கவர்னரின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசாங்கம் கொண்டுவந்து, மிக விரைவில் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையைச் செயல்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

Source:  'The Milli Gazette' - 1 - 15 Nov. 2012