Tuesday 20 August 2013

இஸ்லாமிய வங்கி....!



வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது.  இதையும் மீறி, காலப்போக்குக்கு ஏற்ப சிலர் பண கொடுக்கல்-வாங்கலில் வட்டியை அனுமதித்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனினும், பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்களது சேமிப்புக்கு வங்கிகள் அளிக்கும் சொற்ப வட்டியையும் பெற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.  இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளில் கோரப்படாத தொகையாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில், வட்டி என்ற நடைமுறையே இல்லாத ‘ஷரியத்’ வங்கி முறையை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் வாழும் கேரள மாநில முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை கேரள மாநில அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடம் முன் மொழிந்தது. இதனையடுத்து, கேரள மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இன்று மும்பையில் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, ‘இஸ்லாமிய நிதி கொள்கைகளின்படி, வங்கியமைப்பை சாராத நிதி நிறுவனத்தை தொடங்க கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது’ என்று கூறினார்.

இஸ்லாமிய வங்கிமுறை கொள்கைகளின் படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. கடன் பெறுபவர்களிடமும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது.  வங்கியில் தேங்கும் பணத்தை வைத்து பங்கு வர்த்தகம், பாதுகாப்பு பத்திரங்கள், மது, புகையிலை மற்றும் சூதாட்டம் தொடர்பான தொழில்கள் தவிர இதர வகை தொழில் முனையோர் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : மாலைமலர்

தமிழகத்தில் திரையிடப்படாத படத்தை பார்க்க ஒரு கூட்டம் கேரளம் செல்கின்றது.. வட்டி இல்லா வங்கிக் கணக்கைத் திறக்க நம் மக்கள் கேரளம் செல்வார்களா என்று பொறுத்திருந்து பார்போம்.