Saturday 6 April 2013

நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்



‘அதிரை கர்ழன் ஹஸனா’வின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, அறங்காவலர்கள், ஆலோசகர்கள், மற்ற நிர்வாகிகள், மார்க்கச் சட்ட ஆலோசகர் அடங்கிய நிர்வாகக் குழுவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்ற 29/03/2013 அன்று கீழக் கடைத்தெருவில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதிகாலை 6.30 மணி முதல் நடைபெற்றது.

அறக்கட்டளையின் செயல்பாடுகள், கடன் கொடுப்பு-வரவு பற்றிய விவரங்கள், பரிசீலனையில் உள்ள கடன் விண்ணப்பங்கள், இன்னபிற விஷயங்கள் பேசுபொருள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.  விண்ணப்பதாரர்களின் தேவையையும் அறக்கட்டளையின் பொருள் இருப்பையும் கருத்தில் கொண்டு, சில விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அலுவலகப் பணியாளராக முஹம்மது உமர் என்பவர் ஏப்ரல் முதல் தேதி முதல் பணியாற்றுவார் என்று முடிவாயிற்று.  கடன் விண்ணப்பங்களைப் பெறுவது, அவற்றை நிர்வாகிகளின் பரிசீலனைக்குக் கொண்டுவருவது, கடன் ஒப்புதல் ஆன பின்னர் அவரவருக்குரிய காசோலைகளை ஒப்படைத்தல், கடன் வசூல், அவற்றைப் பதிவு செய்தல் முதலான பணிகள் பற்றி அவருக்கு விளக்கிக் கூறப்பட்டது.

கடந்த இரண்டாண்டுகள் அமைதியாகவும் ஆர்வத்துடனும் செயல்பட்ட இவ்வறக்கட்டளையின் அறங்காவலர்கள் மூவரின் பொறுப்புகளில் சிறிய மாற்றம் செய்து, அதனை ஆலோசனைக் குழுத் தலைவர் அறிவித்தார்.  அது வருமாறு:
·        தலைவர்        :  ஜனாப் மஹ்பூப் அலி
·        செயலாளர்    :  ஜனாப் அலி அக்பர்
·        பொருளாளர் :  ஜனாப் ஜமால் முஹம்மது

மற்ற துணை நிர்வாகிகள்:
·        துணைத் தலைவர்     :  ஜனாப் அஹ்மது அனஸ்
·        துணைச் செயலாளர் :  ஜனாப் அஹ்மது அஸ்லம்
·        துணைச் செயலாளர் :  ஜனாப் முஹம்மது அப்துல் காதர்
இந்தப் புதிய பொறுப்புகள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

எதிர்வரும் ரமலானை ஒட்டி ஜக்காத் விநியோகத்திற்காக பொருளாதாரத்தில் நலிந்திருக்கும் நமதூர் ‘பிலால் நகர்’ மக்களைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவாயிற்று.  இந்த அமர்வில் கலந்துகொண்ட இருவர் ரூபாய் 50,000மும்  10,000மும் ஜக்காத்தாகத் தருவதாக வாக்களித்தது, குறிப்பிடத் தக்கதும் மகிழ்ச்சிக்குரியதுமாகும்.

கஃப்பாராவுடன் அமர்வு நிறைவுற்றது.