Saturday 28 July 2012

வட்டியில்லாத் திட்டத்தை நோக்கி...


வட்டியின் கோரப்பிடியிலும் பொருளாதாரச் சுரண்டலிலும் சிக்கித் தவித்த அரபு மக்களுக்கு 1400 வருடங்களுக்கு முன்னரே வட்டியிலிருந்து விடுதலை வழங்கியது இஸ்லாம். வட்டியை என்னுடைய காலடியில் மிதிக்கிறேன்! கொடுத்த தொகைக்கு அதிகமாக எதையும் இனிமேல் பெறக் கூடாது!என்ற நபி (ஸல்) அவர்களின் வீர முழக்கம் அன்றைய ஏழைகளுக்கு மறுவாழ்வு தந்தது.


வட்டியின் இறுதி முடிவு கஷ்டத்தில்தான் முடியும்! வட்டிப் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் அபிவிருத்தி இருக்காது! வட்டி வாங்குபவனும் கொடுப்பவனும் கணக்கெழுதுபவனும் அதற்காகச் சாட்சி சொல்பவர்களும் அல்லாஹ்வின் சாபத்திற்குரியோர்! அந்த சாபத்தில் அனைவரும் சமமானவர்கள் என்றெல்லாம் மார்க்கம் எச்சரிக்கிறது. வட்டி வாங்குவது அல்லாஹ்வுக்கு எதிராகத் தொடுக்கும் போர் என்று கூட அல்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது. வட்டியை நோக்கிச் செல்பவன் தன்னை அழித் தொழிக்கும் பாதாளப் படுகுழியை நோக்கி அடியெடுத்து வைக்கின்றான். அவனை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் அல்லாஹ்வும் அவன் தூதரும் எச்சரிக்கின் றார்களே தவிர, இவன் வட்டி வாங்குவதாலோ கொடுப்பதாலோ அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.


வாழ்வின் எதார்த்தத்தை மறந்து வாழும் மனிதன் ஆடம்பர வாழ்க்கையை ஏறெடுத்துப் பார்க்கிறான். போலிக் கவர்ச்சிகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள, தன் தகுதிக்கு மீறிய முடிவெடுத்துக் கொண்டு கல்லாவைப் பார்க்கிறான்; காலியாக உள்ளது. வீடு தேடிவந்து வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் நினைவுக்கு வரவே, சில மணித் துளிகளில் பைனான்ஸ் கம்பெனி, பேங்க், அடமானக் கடை, கந்து வட்டி ஆகியோரின் வாசலில் தன்னை அடமானம் வைக்கிறான். அவன் அடமானம் வைப்பது, அவன் மானத்தையும்தான்!


உலகப் பொருளாதார நிர்ணயப் புருஷனாக பீற்றிக் கொண்ட அமெரிக்கா, வட்டி வங்கிகளின் சரிவால் பிற நாடுகளிடம் பிச்சை எடுத்ததையும், வட்டி வங்கிகளின் ஒத்துழைப்புடன் போலி ஆடம்பரங்களையும் அனாச்சாரங்களையும் அரங்கேற்றி வந்த ஒரு வளைகுடா நாடு பிறரிடம் யாசகம் கேட்டு நின்றதையும் கண்ட பிறகும் கூட, வட்டி மோகம் குறைய வேண்டாமா?


தம் ஆரம்பர வாழ்க்கைக்காகக் கணவர்களுக்குத் தெரியாமல் வட்டி வாங்கியதால் பிறரிடம் தங்கள் சொத்தை மட்டுமல்ல, தங்கள் கற்பையும் இழந்த பெண்கள் எத்தனை பேர்! ஏன் இந்த அவல நிலை? ஊர் நிசப்தாக இருக்கும் மதிய வேளையில் பெண்கள் தனித்திருக்கும் வீட்டுக்குள் வட்டி வசூல் என்ற பெயரில் வட்டிக் கயவர்கள் நுழைவதற்குக் காரணமாக இருப்பது எது? முஸ்லிம் சமூகக் கட்டமைப்பையும் கண்ணியத்தையும் காப்பாற்றுவதில் பொருளாதாரத்திற்கு மகத்தான பங்குண்டு! இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக ‘ஜகாத்’ இடம் பெற்றிருப்பதும் இதனால்தான்!


நன்றி: ‘சமுதாய ஒற்றுமை’ அக்டோபர் 2010 இதழ்

Wednesday 18 July 2012

போட்டியா? இல்லை.

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். 'முன்னேற்றப் பாதையில் கர்ழன் ஹசனா' எனும் கட்டுரையை 'அதிரை எக்ஸ்பிரஸ்'ஸில் படித்தவுடன் - இன்னும் சிலர் பார்த்தவுடன், "இது பைத்துல் மாலுக்குப் போட்டியானது" அது, இது என்று என்னவெல்லாமோ எழுதித் தள்ளினர்.

நாம் என்னவெல்லாம் சமாதானம் சொன்னாலும், அவர்கள் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து, அவர்களே இரண்டு பதிவுகளை அதே தளத்தில் பதிந்து, தமது சினத்தைத் தீர்த்துக்கொண்டனர். வாக்கு வாதம் சூடானபோது, நமது காதுக்கும் கவனத்துக்கும் வந்த செய்திகளையும் வெளிப்படுத்தினோம். இறுதியில், நம்மையும் அவர்களையும் அல்லாஹ்விடமே விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டோம்.

இதற்கிடையில், நடுநிலையாளர்களும் நற்சிந்தனையாளர்களும் நம்மை ஊக்கப்படுத்தித் தம கருத்துகளை வெளியிட்டபோது, மிகப்பலர் நமது நல்ல நோக்கத்தைப் புரிந்து உதவிகள் செய்தும், செய்ய முடிவு செய்தும் இருக்கிறார்கள் என்பதைக் காண முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்!

எதிர்வரும் ரமலான் மாதம் மனிதர்களின் ஈகையுள்ளங்களைத் திறந்துவிட்டு, அவர்களை அருள் மழையில் நனையச் செய்யும் அற்புதமான மாதமாகும். அத்தகைய நல்லுள்ளங்கள் 'கர்ழன் ஹசனா'வைப் பயன்படுத்திக்கொள்வான் வேண்டி, இந்த அழகிய கடன் அறக்கட்டளையின் வங்கிக கணக்கை இத்துடன் பதிந்தனுப்புகின்றோம்.

கனரா பேங்க், அதிராம்பட்டினம் கிளை,
Azahiya Kadan Arakkattalai A/C # 1201201001056 / IFSC Code :CNRB0001201

Tuesday 3 July 2012

ஆலோசனைக் கூட்டம்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.
அதிரை ‘கர்ழன் ஹஸனா’வின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் ‘தக்வா’ப் பள்ளியில் இன்று (01-07-2012) காலை ஏழு மணிக்கு நடைபெற்றது.
ஆலோசகர்கள் இருவருடன், தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச் செயலர், பொருளாளர் மற்றும் ஆர்வலர் ஒருவரும் கலந்துகொண்ட அமர்வில், பல விவரங்கள் அலசப்பட்டன.
·         இன்றுவரையிலான கணக்கு ஒப்படைக்கப்பட்டது.
·         கடன் வழங்கியது போக மீதி வங்கி இருப்பில் இருக்கும் தொகை சரி  காணப்பட்டது.
· கடன் பெற்றிருப்போர் பற்றிய தகவல்கள் அனைவராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
·         ஆலோசகர் அப்துல் காதிர் அவர்கள் தயாரித்துக்கொண்டு வந்த ‘நிர்வாக விதிமுறைகள்’ அனைவருக்கும் வாசித்துக் காட்டப்பட்டு, அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, செயலுறுப் பெற உறுதி செய்யப்பட்டது.  (அதன் விவரம் கீழே.) 


‘கர்ழன் ஹஸனா’வின் நிர்வாகச் செயல்முறைகள்
(Administrative Rules & Regulations)
·         கீழ்க்காணும் விதிமுறைகள் இன்று (01-07-2012) முதல் 31-03-2013 வரை நடைமுறையில் இருக்கும், இன்ஷா அல்லாஹ்.  அதன் பின்னர் மாற்றங்கள், திருத்தங்கள் தேவைப்பட்டால், செய்யப்படும்.

·         மாதாந்திரக் கூட்டத்தில் வரவு-செலவுக் கணக்கு, கடன் உதவி விவரங்கள், நடப்பு நிதிநிலை, எதிர்கால மதிப்பீடு (Projection) ஆகியவை முடிவு செய்யப்பட வேண்டும்.

·         வருடாந்திர நிதிநிலை ஒவ்வொரு மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதை ஒட்டிய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும்.

·         உறுப்பினர் கட்டணம், நன்கொடை, மாதச்  சந்தா, ஜக்காத், கடன் வசூல் ஆகியவற்றுக்குத் தனித்தனி ரசீதுப் புத்தகங்களும் தனித்தனிக் குறிப்பேடுகளும் பராமரிக்க வேண்டும்.

·         ‘கடன் ஒப்புதல் குழு’ (Loan Approval Committee) அமைத்து, அதன் பெரும்பாலான உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கடனுதவிகள் வழங்கப்படும்.

·         குறு வணிகர்களில் பணப் பற்றாக்குறை உள்ளோர், வட்டிக்கு வாங்கி அல்லல் படுவோர், வியாபாரத்தை விருத்தி செய்ய முடியாமல் திணறுவோர், வட்டியே வேண்டாம் என்று உறுதியாக உள்ள வசதி குறைந்தோர், தனித் திறண் பெற்றும் பொருளில்லாமல் அவதியுறும் தொழில் முனைவோர் போன்ற தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் பொறுப்பு உறுதி (guarantee) பெற்றுக் கடன் வழங்க வேண்டும்.  

·         தற்போதைக்கு, கடனுதவித் தொகை குறைந்தது ரூபாய் ஆயிரமும், அதிக அளவு ரூபாய் ஐயாயிரமும் குறுவணிகர்கள், சுயதொழில் முனைவோர் அல்லது சேவை செய்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.

·         அதிகப் பட்சம் ஒரு மாதத்திற்கு ரூபாய் 25,000 வரை கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும்.

·              இவ்வறக்கட்டளையிலிருந்து கடன் பெறுவோர், தாம் பெற்ற கடன் தொகையை நாள் அல்லது வார அல்லது மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்துவதாகக் கடன் அட்டையில் உறுதிமொழி அளித்துக் கையெழுத்திட வேண்டும்.

·         அறக்கட்டளை ஆலோசகர்கள், நிர்வாகிகள், இதன் பணியாளர்கள், வேறு ஒருவருக்குப் பொறுப்புறுதி அளித்தோர், நிர்வாகக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படாதோர் ஆகியோர் கடனுதவி பெறத் தகுதி பெற முடியாது.

·         ஜக்காத் பெறத் தகுதி பெற்றோருள் ஜக்காத்தை வசூலிப்பவரும் அடங்குவதால், அறக்கட்டளைப் பணியாளரும் தான் வசூலித்த ஜக்காத் நிதியிலிருந்து தன் பங்கினைப் பெறுவார்.

·         உறுப்பினர் கட்டண விவரம்: 1. சாதாரண உறுப்பினர் தொகை 1,000/-
                                              2. சிறப்பு உறுப்பினர் தொகை 5,000/-
                                              3. ௦௦ஆயுள் உறுப்பினர் தொகை 10,000/-

·         அரசியல், சமூக மற்றும் ஊர் விவகாரங்களில் அறக்கட்டளையின் சார்பாக எவ்விதக் கருத்தாடல்களோ, ஆதரவோ, மறுப்போ, வெளியீடுகள் மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் அல்லது வேறு எந்தச் சாதனங்கள் மூலமும் தெரிவிக்கக் கூடாது.

·         கடன் கட்டுப்பாடு (Credit Control), கணக்குத் தணிக்கை (Auditing) மற்றும் கடன் திட்ட மதிப்பீடு (Loan Budgetting) குழு ஏற்படுத்தி, நிதிச் செயல்பாடுகள் அனைத்தையும் கண்காணிக்க வேண்டும்.  

·         எக்காலத்திலும், அறக்கட்டளைக்குச் சொந்தமாக எவ்வித அசையாச் சொத்தையும் வாங்கவோ, விற்கவோ, வாங்கி விற்கவோ கூடாது.

·         பொதுமக்களுக்கு நிதியின் பயன்பாடு சுழற்சி முறையில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.

·         கடன் வழங்க, அதன் ஏற்பாட்டுக் கால அளவு (Processing time) குறைந்தது ஒரு வார காலமாக இருக்கவேண்டும்.

·         அழகிய கடன் அறக்கட்டளை வேறு எந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டிலும் அடங்கியதன்று.  ஆனால், நற்காரியங்களில் இணைந்து செயல்படுவதில் ஆட்சேபனை இல்லை.  அறக்கட்டளையின் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் தம்மை வேறு அமைப்புகளில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதிலும்  ஆட்சேபனை இல்லை.  ஆனால், அறக்கட்டளையின் பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.