Saturday 27 July 2013

அமைதிக்கு அருமருந்து

.அமைதிக்கு அருமருந்து

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுஉலகில் மனித இனம் வாழ்வதற்குப்  பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத்.  படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத்.  இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதாரத்  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை.  ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிறபோது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்குச் சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய்ப் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி,  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

‘ஆசைகளின் மூட்டைஎன வர்ணிக்கப்படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருள்  மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி, அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது.  தொடர்ந்து நியமப்படி ஜகாத் வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து, அதிலே ஓரளவு தாராளத் தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால், நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்துவிடக் கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும் என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால், அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது. ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

பணம் படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும்போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.  இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை விளை விக்கின்றது.
அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் இறையச்சத்தில் -  ஏழைகளுக்குஅவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்தி வைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

(சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் ‘அதிரை நிருபர்’ வலைத்தளத்தில் எழுதிவரும் ‘இஸ்லாமியப் பொருளாதாரம்’ எனும் கட்டுரைத் தொடரின் அண்மைப் பதிவிலிருந்து தொகுக்கப் பெற்ற கருத்துக் கோவை.)

1 comment:

  1. மிகவும் மகிழ்கிறேன். எனக்கு வழங்கப் பட்ட பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். ஜசாக் அல்லாஹ் ஹைரன் காக்கா.

    வஸ்ஸலாம்.

    இப்ராஹீம் அன்சாரி.

    ReplyDelete