Wednesday 19 September 2012

வட்டிக்கு உதை...!


புதுக்கோட்டை: கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையம் ஒன்றை துவக்கி, அதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியில்லாக் கடன் வழங்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் ஒன்று, அம்மாப்பட்டினம். மணமேல்குடி அருகில் உள்ள இக்கிராமத்தில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என, 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஏழைகள்:


இவர்களில் பல குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கும் கீழ், ஏழ்மை நிலையில் உள்ளனர். விவசாயக் கூலி வேலை செய்வது, மீன் வியாபாரம் செய்வது, கயிறு திரித்தல் போன்றவை தான், இவர்களது தொழில். இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை நம்பியே, இவர்களது குடும்பம் உள்ளது. ஒரு நாள் வேலைக்குச் செல்லா விட்டால் கூட, இவர்களது பாடு திண்டாட்டம் தான். இதை சமாளிக்க, கந்துவட்டி கும்பலிடம் கையேந்துவதை, அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். குறிப்பாக, 86 குடும்பத்தினர், கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, மீள முடியாமல், தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும், கொத்தடிமைகளாக வேலை பார்த்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இஸ்லாத்தின் கொள்கைப்படி, வட்டி வாங்குவது பாவச்செயல் என்பதை உணர்ந்த, அக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள், கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நடவடிக்கைகளை துவக்கினர். இதற்காக, 25 பேரை உறுப்பின ராக கொண்ட, "வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையம்' என்ற, தன்னார்வ அமைப்பை உருவாக்கினர். இதன்மூலம், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, கல்வி, மருத்துவம், சிறு தொழில் போன்றவற்றுக்கு, 3,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியின்றி கடன் வழங்கி வருகின்றனர். ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஏழ்மை நிலையில் உள்ள அனைவருக்கும், கடன் வழங்குகின்றனர். மொத்தம், கடன் தொகையை, 60 நாட்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது தான், இவர்கள் விதித்துள்ள நிபந்தனை. இதை ஏற்று, கடன் வாங்கிய அனைவரும், முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். இதுவரை, 2,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளனர். வட்டியில்லாக் கடன் வழங்கும் சேவை துவங்கியது முதல், அம்மாப்பட்டினம் கிராமத்தில், கந்துவட்டி கும்பல் நுழைய தடைவிதிக்கப்பட்டது. ஆண்டாண்டு காலமாக, அக்கிராமத்தை அச்சுறுத்தி வந்த கந்துவட்டி கும்பல், தற்போது அந்த கிராமத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இயக்கம்:


கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல், வரதட்சணைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை, அக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் துவக்கியுள்ளனர். இதற்காக, "வரதட்சணை புதைப்பு' என்ற இயக்கத்தை துவக்கியுள்ள அவர்கள், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, மாநாடு மற்றும் பேரணி நடத்தியுள்ளனர். கடலோரக் கிராமங்களை குறிவைத்து, கட்டுமாவடி மற்றும் எஸ்.பி., பட்டினத்தில் துவங்கிய பேரணியில், பெண்கள் உட்பட, 6,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் வரதட்சணை கொடுமைகளுக்கும், விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும், அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையத்தின் தலைவர் முகம்மது இத்திரீஸ் கூறியதாவது: அம்மாப்பட்டினம் கடலோரக் கிராமத்தில், ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அமைப்பை உருவாக்கினோம். இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, 3,000 முதல், 10 ஆயிரம் ரூபாய், வரை வட்டியில்லாக் கடன் வழங்கி வருகிறோம்.

ஜாதி, மதம் இல்லை:


கடன் வழங்க நாங்கள் ஜாதி, மதம் பார்ப்பது கிடையாது. கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதுவரை, 5,000க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர். இது போன்று, வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளையும் துவக்கியுள்ளோம். விரைவில், அப்பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு முகம்மது இத்திரீஸ் கூறினார்.


1 comment: